Saturday, August 31, 2013

கு.அழகிரிசாமி - படைப்பிலக்கிய ஆழ்கடல்

  

abp.sized    திருநெல்வேலி மாவட்டத்தில் கோவில்பட்டிக்கும் கயத்தாறுக்கும் இடையில் இடைசெவல் என்னும் சிற்றூரில், 1923-ஆம் ஆண்டு செப்டம்பர் 23-ஆம் தேதி, குருசாமி-தாயம்மாள் தம்பதிக்குத் தலைமகனாகப் பிறந்தவர், கரிசல்காட்டு எழுத்தாளர் கு.அழகிரிசாமி.

           கரிசல் மண்ணுக்குத் தனிப் பெருமையை ஏற்படுத்தியவர்கள், இலக்கியம் படைத்துத் தமிழுக்கு அழியாப் பெருமையைச் சேர்த்துத் தந்த கவிஞர்களும் எழுத்தாளர்களும், சுதந்திரப் போராட்டத் தியாகிகளுமாவர்.

      கரிசல் மண்ணில் பிறந்து இலக்கிய வேகத்துடன் சென்னை, மலேசியா பகுதிகளில் வாழ்க்கையின் பெரும் பகுதிகளைக் கழித்து, இலக்கியப் படைப்புக்கு உரித்தான பாராட்டுதல்களையும் பொற்கிழியையும் பெறாதவர் கு.அழகிரிசாமி. சாகித்ய அகாதெமி பரிசையும் அவர் மறைந்த பிறகுதான் அவர் துணைவியார் பெற்றுக்கொள்ள நேர்ந்தது.
    மூத்த பழமைக்கும் வளர்ந்துவரும் புதுமைக்கும் பாலமாக அமைந்த அடக்கமான - ஆனால், ஆழமான சமூகக் கண்ணோட்டம் கொண்டவர் எழுத்தாளர் கு.அழகிரிசாமி. வாழ்ந்த 47 ஆண்டுகளில் காதலித்து மணந்த மனைவியுடனும், நான்கு குழந்தைகளுடனும் 15 ஆண்டுகளே வாழ்ந்த - வாழ்க்கையின் வளப்பத்தை முழுமையாக அவர்  அனுபவிக்கவில்லை.
அவருடைய சமகாலத்துப் புகழ்பெற்ற எழுத்தாளரான புதுமைப்பித்தனின் எழுத்தால் ஈர்க்கப்பட்டார். தொ.மு.சி.யுடன்  இணைபிரியா நண்பராக இருந்தார் கு.அழகிரிசாமி.

      கதையொன்றை யார் வேண்டுமானாலும் எழுதியிருக்கலாம். ஆனால், அந்தக் கதையை இருபது, முப்பது ஆண்டுகளுக்குப் பிறகு படித்தாலும் அதே புதுமை, உயிர்த்துடிப்பு, வியப்பு குன்றாமல் அன்றலர்ந்த மலரைப்போல் இருந்தால், அது இலக்கிய வரிசையில் சேர்ந்துவிடும்.

     வசதியான குடும்பத்தில் அழகிரிசாமி பிறக்கவில்லை. அதனாலேயே அவரை நான்காவது வரைகூட படிக்க வைக்க அவரது பெற்றோரால் முடியவில்லை. ஆனால், விடாமுயற்சியுடன் எஸ்.எஸ்.எல்.சி. வரை படித்து முடித்தார். அந்தச் சிற்றூரில் எஸ்.எஸ்.எல்.சி. வரை படித்தவர் என்ற "பெருமை' அவருக்கு உண்டு. பள்ளிப் படிப்பைவிட அவர் அனுபவத்தில் பெற்ற அறிவே அதிகம்.
  
   பரம்பரையாக வீட்டில் தெலுங்கு பேசுபவர்கள் அழகிரிசாமியின் குடும்பத்தார். ஆனால், வெளியே பேசும்போது தமிழில்தான் பேசுவார் அழகிரிசாமி.

    கம்பர், தாகூர், பாரதி என்று நிறைய நூல்களை சுயமாகப் படித்தார். புதுமைப்பித்தன் கதைகள் அவரை மிகவும் கவர்ந்தன. அதனால் அவரது இலக்கிய ஆர்வம் கொழுந்துவிட்டது. சிறுகதைகள் எழுதினார். முதல் சிறுகதை அனுப்பிய வேகத்தில் திரும்பி வந்தாலும், அடுத்த சிறுகதை 1943-ஆம் ஆண்டு "ஆனந்த போதினி' மாத இதழில் பிரசுரமானது. கதையின் பெயர் "உறக்கம் கொள்ளுமா?'
At Navasakthi
   ரஷ்ய எழுத்தாளர் கார்க்கியின் எழுத்து அவரை மிகவும் கவர்ந்தது. கார்க்கியின் நூலை முதன் முதலில் தமிழாக்கம் செய்தவர் கு.அ.தான். தமிழ் இலக்கியங்களுடன் மேல்நாட்டு இலக்கியங்களையும் படித்தார். பழைய பாடல்களுக்கு உரை எழுதும் ஆற்றலையும் வளர்த்துக்கொண்டார். "எழுத்தும் தெய்வம் எழுதுகோலும் தெய்வம்' என்பதை லட்சியமாகக் கொண்டார்.
அரசுப் பணியில் சேரத் தேர்வு பெற்றதால், சார்பதிவாளர் அலுவலகத்தில் முப்பத்தைந்து ரூபாய் சம்பளத்தில் எழுத்தர் உத்தியோகம் கிடைத்தது. ஆனால், நாள்தோறும் பத்திரங்களைப் பதிவது அவருக்குப் பிடிக்கவில்லை. அந்த எழுத்தர் உத்தியோகத்தில் மனநிறைவு ஏற்படவில்லை. அதனால் சென்னைக்கு வந்து, முதல் கதையை வெளியிட்ட "ஆனந்த போதினி' பத்திரிகை அலுவலகத்துக்கு வந்து சேர்ந்தார்.

   "ஆனந்த போதினி', "பிரசண்ட விகடன்' ஆசிரியராக இருந்த மூத்த எழுத்தாளர் நாரண துரைக்கண்ணன் அந்த நாள்களில் எழுத்தாளர்களுக்கு ஒரு வேடந்தாங்கல்.
 
  கு.அழகிரிசாமியின் எழுத்தாற்றலைப் புரிந்து கொண்ட நாரண துரைக்கண்ணன், கு.அழகிரிசாமிக்கு உதவி ஆசிரியர் பணியைத் தந்தார். நாரண துரைக்கண்ணன், கு.அழகிரிசாமியின் திறமையைக் கண்டு ஊக்கமளித்து பல வகைகளில் ஆதரவு தந்தார்.

  "பிரசண்ட விகடனி'ல் வெளிவந்த அவரது கதைகளை சமகால எழுத்தாளர்களான வல்லிக்கண்ணனும், புதுமைப்பித்தனும், தொ.மு.சி.ரகுநாதனும் பாராட்டினார்கள். பிரசண்ட விகடன் பத்திரிகை அலுவலகத்தை விட்டுவிட்டு "தமிழ்மணி' என்ற அரசியல் வார இதழில் சேர்ந்தார்.

   "தமிழ்மணி' வார இதழில் அவர் சில காலம்தான் பணியாற்றினார். அதன் பிறகு வை.கோவிந்தன் வெளியிட்ட "சக்தி' மாத இதழில் உதவி ஆசிரியராகச் சேர்ந்தார். ஆசிரியர் தி.ஜ.ரங்கநாதன். கு.அழகிரிசாமியின் முற்போக்குச் சிந்தனையையும், ஆற்றலையும் கண்டுகொண்ட வை.கோவிந்தன், அழகிரிசாமிக்கு சக்தி இதழிலும் பதிப்பகத்திலும்  இடமளித்து, எழுதுவதற்கு வாய்ப்பளித்தார்.

      கு.அ.வின் முயற்சியால் வெளியான கம்பராமாயணம், காவடிச் சிந்து ஆகிய பதிப்புகள் அவருடைய ஆராய்ச்சித் திறனையும் மொழியாக்க ஆற்றலையும் வெளி உலகுக்குத் தெரியப்படுத்தின.
                                                 எழுத்து வேலையில் - கு.அ.ku2
 
  ""கதையில் உள்ளத்தைக் கவரும் நிகழ்ச்சிகளும் வர வேண்டும்; அதே சமயத்தில் இப்படி நடந்திருக்க முடியுமா?' என்று கேள்வி எழுப்பக்கூடிய நிகழ்ச்சிகளை விலக்க வேண்டும். பிரத்யேகமாகப் பார்த்த உண்மையான நிகழ்ச்சிகளாக இருக்கலாம்; ஆனால், படிக்குபோது இது நம்பக் கூடியதா என்று தோன்றுமானால் அது பயனற்றதாகி விடுகிறது. கதையில் கதையும் இருக்க வேண்டும்; அதே சமயத்தில் அது கதையாகவும் இருக்கக் கூடாது. இம்மாதிரி கதைகள் புனைவது எவ்வளவு கடினமான கலை என்பதை அதை எழுதும் துறையில் இறங்கி, வெற்றியோ, தோல்வியோ அடைந்தவர்களால்தான் உணர முடியும். அழகிரிசாமி அத்தகைய கடினமான கலையில் அபூர்வமாக வெற்றியடைந்திருக்கிறார்.

    அழுத்தமான ஒரு மூலக் கருத்து இல்லாமல் கதையை எழுதக்கூடாது என்பது கு.அ.வின் இலக்கியக் கோட்பாடு. கு.அ.வின் "ராஜா வந்திருக்கிறார்' என்ற கதை இந்திய மொழிகளிலும், ரஷ்ய மொழியிலும் மொழிபெயர்க்கப்பட்ட சிறந்த கதை.

    "சக்தி' இதழில் பணியாற்றிய பிறகு ஐந்தாண்டுகள் மலேசியா (1952-1957) சென்றார். அந்தக் காலம் அவர் வாழ்க்கையின் பெரும் திருப்புமுனை எனலாம். 1955-ஆம் ஆண்டு கு.அழகிரிசாமிக்கும், சீதாலட்சுமிக்கும் மலேசியாவில் திருமணம் நடைபெற்றது. கு.அ.இளம் வயதிலிருந்தே இசைஞானம் மிக்கவர். இசைஞானம் உள்ள ஒரு பெண்ணை மனைவியாக அடைய வேண்டும் என்ற அவருடைய லட்சியக் கனவின்படி சீதாலட்சுமி அமைந்தார். மலேசிய வானொலியில் முக்கூடல் பள்ளு இசை நாடகத்துக்குப் பாடியவர்களில் ஒருவர் சீதாலட்சுமி. கு.அ.வுக்கும் சீதாலட்சுமிக்கும் நடைபெற்ற திருமணம் காதல் திருமணம் மட்டுமல்ல, சாதி வித்தியாசங்களைக் கடந்த திருமணம்.
gA WITH SITA                                                              கு.அ. & சீதா - 19 Jan 1956

    ""மலேசிய நாட்டில் தன்னுடைய இலக்கிய வாழ்க்கைக்கு உற்ற நண்பர்கள் இல்லை என்பதாலும், தமிழ் நாட்டு அன்பர்களை விட்டுப் பிரிந்திருக்க மனமில்லாததாலும் நான் மலேசியா நாட்டை விட்டு தமிழ்நாட்டுக்குத் திரும்பினேன்'' என்று கு.அ. கூறும் காரணங்கள் ஏற்புடையவைதாம். மேலும், "தமிழ்நேசன்' நாளிதழ் அலுவலகத்திலும் வெளியே அரசியல்வாதிகள் சிலரின் ஒத்துழையாமையும் அவருக்கு ஆசிரியர் பணியில் சோர்வை ஏற்படுத்தின.

       1957-ஆம் ஆண்டு சென்னை திரும்பிய அவர், 1960-ஆம் ஆண்டு வரை காந்தி நூல் வெளியீட்டுக் கழகத்தில் மொழிபெயர்ப்பாளராகப் பணியாற்றினார். பிறகு "நவசக்தி' நாளிதழில் 1965 வரை பணியில் இருந்தார். "நவசக்தி' இதழில் இருந்த காலத்தில்தான் அவர் "கவிச்சக்ரவர்த்தி' என்ற வரலாற்று நாடகத்தை எழுதினார். அந்த நாடகம் அவருக்குப் பெயரையும் புகழையும் பெற்றுத்தந்தது.
"நவசக்தி' நாளிதழ் பணியிலிருந்து விலகி, ஐந்தாண்டுகள் சுதந்திர எழுத்தாளராக இருந்தார். கடிதம் எழுதுவதை அவர் கடமையாகக் கொண்டிருந்தார். அவ்வாறு அவர் எழுதிய கடிதங்களை கி.ராஜநாராயணன் தொகுத்து, "கு.அழகிரிசாமி கடிதங்கள்' என்ற நூல் வெளிவந்துள்ளது. கு.அழகிரிசாமியின் சிறுகதைகள் ஒன்பது தொகுதிகளாக வெளியிடப்பட்டுள்ளன.
PHOTO-4 (3)

   20-ஆம் நூற்றாண்டின் சிறந்த சிறுகதை எழுத்தாளராகத் திகழ்ந்த அழகிரிசாமி, சிறுகதை, கட்டுரை, புதினங்கள், நாடகங்கள், மேடை நாடகங்கள், கவிதைகள், கீர்த்தனைகள், மொழிபெயர்ப்புகள் என்று பல துறைகளில் சாதனை புரிந்துள்ளார். இறுதியாக "சோவியத் நாடு' ஆசிரியர் குழுவில் சேர்ந்தார். ஆனால், உடல்நிலை காரணமாக அவரால் முழுமையாக அந்தப் பணியில் தொடர முடியவில்லை.

     1970-ஆம் ஆண்டு ஜூலை 5-ஆம் தேதி எழுத்தாளர் கு.அழகிரிசாமியின் வாழ்க்கை முடிந்தது. இது தமிழ்ப்படைப்புலகத்துக்கு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பு.

 Thanks to : http://dinamani.com & http://azhiyasudargal.blogspot.com


Tuesday, August 27, 2013

கி.ராஜநாராயணன் – கதவு



கதவு ஆட்டம் ஆரம்பமாகியது,பக்கத்து வீட்டுக் குழந்தைகளும் ஆரவாரத்தோடு கலந்து கொண்டார்கள். ‘எல்லோரும் டிக்கட்டு வாங்கிக்கிடுங்கஎன்றான் சீனிவாசன். உடனே எனக்கொரு
டிக்கெட், உனக்கொரு டிக்கெட்என்று சத்தம் போட்டார்கள்.

எந்த ஊருக்கு வேணும்? ஏய் இந்த மாதிரி இடிச்சி தள்ளினா என்ன அர்த்தம்? அப்புறம் நான் விளையாட்டுக்கு வர மாட்டேன்
இல்லை, இல்லை, இடிச்சி தள்ளலே
சரி, எந்த ஊருக்கு டிக்கெட் வேணும்?”
குழந்தைகள் ஒருவருக்கொருவர் முகத்தைப் பார்த்துக் கொண்டார்கள். ஒருவன்திருநெல்வேலிக்குஎன்று சொன்னான். “திருநெல்வேலிக்கு, திருநெல்வேலிக்கு
என்று கூப்பாடு போட்டுச் சொன்னார்கள் எல்லோரும்.
லட்சுமி ஒரு துணியால் கதவைத் துடைத்துக் கொண்டிருந்தாள். சீனிவாசன்
வெறுங்கையால் டிக்கெட் கிழித்துக் கொடுத்து முடிந்ததும், கதவில் பிடித்துத்
தொத்திக் கொண்டார்கள். சிலர் கதவை முன்னும் பின்னும் ஆட்டினார்கள். தன் மீது
ஏறி நிற்கும் அக்குழந்தைகளை அந்த பாரமான பெரிய கதவு பொங்கிப் பூரித்துப் போய் இருக்கும் அக்குழந்தைகளை வேகமாக ஆடி மகிழ்வித்தது. “திருநெல்வேலி வந்தாச்சிஎன்றான் சீனிவாசன். எல்லோரும் இறங்கினார்கள். கதவைத் தள்ளியவர்கள் டிக்கெட் வாங்கிக் கொண்டார்கள். ஏறினவர்கள் தள்ளினார்கள். மீண்டும் கதவாட்டம்
தொடங்கியது.
அது பழைய காலத்துக் காரை வீடு. பெரிய ஒரே கதவாகப் போட்டிருந்தது. அதில் வசித்து வந்தவர்கள் முன்பு வசதி உள்ளவர்களாக வாழ்ந்தவர்கள். இப்பொழுது ரொம்பவும் நொடித்துப் போய் விட்டார்கள். அந்த வீட்டிலுள்ள பெண் குழந்தைகளில் மூத்ததிற்கு எட்டு வயது இருக்கும். இன்னொன்று கைக்குழந்தை.
அம்மா காட்டுக்கு வேலை செய்யப் போய் விடுவாள். அப்பா மணி முத்தாறில் கூலி வேலை செய்யப் போய்விட்டார். லட்சுமியும் சீனிவாசனும் கைக்குழந்தையை அம்மா
காட்டிலிருந்து வரும் வரை வைத்துக் கொண்டு கதவோடு விளையாடிக்
கொண்டிருப்பார்கள்.
ஒருநாள் தெருவில் ஒரு தீப்பெட்டிப் படம் ஒன்றை லட்சுமி கண்டெடுத்தாள். படத்தில்
ஒரு நாய் இருந்தது. அழுக்காக இருந்ததால் படத்தில் எச்சிலைத் துப்பி தன்
பாவாடையால் துடைத்தாள். இதனால் சில இடங்களில் இருந்த அழுக்கு படம் பூராவும்
பரவிற்று. ஆனால் லட்சுமிக்கு மிகவும் திருப்தி, படம் சுத்தமாகிவிட்டதென்று.
படத்தை முகத்துக்கு நேராகப் பிடித்து தலையைக் கொஞ்சம் சாய்த்துக் கொண்டு
பார்த்தாள். அப்புறம் இந்தப் பக்கமாகச் சாய்த்துக் கொண்டு பார்த்தாள்.
சிரித்துக் கொண்டாள். காண்பிக்க பக்கத்தில் யாராவது இருக்கிறார்களா என்றும்
சுற்றும் முற்றும் பார்த்தாள். ஒருவரும் இல்லை. வீட்டை நோக்கி வேகமாக நொண்டி
அடித்துக் கொண்டே போனாள், சந்தோஷம் தாங்க முடியாமல்.
லட்சுமி வீட்டுக்கு வந்தபோது சீனிவாசன் நாடியைத் தாங்கிக் கொண்டு வாசல்
படிக்கட்டில் உட்கார்ந்திருந்தான். அவனைக் கண்டதும் லட்சுமி படத்தைப்
பின்புறமாக மறைத்துக் கொண்டு, “டேய் நா என்ன கொண்டு வந்திருக்கேன் சொல்லு
பாப்போம்என்றாள்
என்ன கொண்டு வந்திருக்கியோ? எனக்குத் தெரியாது
சொல்லேன் பாப்போம்
எனக்குத் தெரியாது
லட்சுமி தூரத்தில் இருந்தவாறே படத்தைக் காண்பித்தாள்.
அக்கா, அக்கா, எனக்குத் தரமாட்டியா?” என்று கேட்டுக் கொண்டே இறங்கி வந்தான்
சீனிவாசன். ‘முடியாதுஎன்ற பாவனையில் தலையை அசைத்து படத்தை மேலே தூக்கிப் பிடித்தாள். சீனிவாசன் சுற்றிச் சுற்றி வந்தான். “ம்ஹும், முடியாது.
மாட்டேன்... நான் எவ்ளோ கஷ்டப்பட்டு தேடி எடுத்துக் கொண்டு வந்திருக்கேன்
தெரியுமா?” என்றாள்.
ஒரே தடவை பாத்துட்டுக் கொடுத்துர்றேன் அக்கா, அக்காஎன்று கெஞ்சினான்.
பார்த்துட்டுக் கொடுத்துறனும்
சரி
கிழிக்கப்படாது
சரி சரி
சீனிவாசன் படத்தை வாங்கிப் பார்த்தான். சந்தோஷத்தினால் அவன் முகம் மலர்ந்தது.
டேய், உள்ளப் போய் கொஞ்சம் கம்மஞ்சோறு கொண்டா, இந்தப் படத்தை நம்ம கதவிலே ஒட்டணும்என்றாள்.
ரொம்பச் சரிஎன்று உள்ளே ஓடினான் சீனிவாசன்.
ரெண்டு பேருமாகச் சேர்ந்து கதவில் ஒட்டினார்கள். படத்தைப் பார்த்து
சந்தோஷத்தினால் கை தட்டிக் கொண்டு குதித்தார்கள். இதைக் கேட்டு பக்கத்து
வீட்டுக் குழந்தைகளும் ஓடி வந்தன. மீண்டும் கதவு ஆட்டம் தொடங்கியது.
2.
அந்தக் கதவைக் கொஞ்சம் கவனமாகப் பார்க்கிறவர்களுக்கு இந்தக் குழந்தைகள் ஒட்டிய படத்துக்குச் சற்று மேலே இதே மாதிரி வேறு ஒரு ப்டம் ஒட்டி இருப்பது தெரிய வரும். அந்தப் படம் ஒட்டி எத்தனையோ நாட்கள் ஆகி விட்டதால் அழுக்கும் புகையும் பட்டு மங்கிப் போயிருந்தது. ஒருவேளை அது லட்சுமியின் தகப்பனார் குழந்தையாக இருக்கும்போது ஒட்டியதாக இருக்கலாம்.
குழந்தைகள் இப்படி விளையாடிக் கொண்டிருக்கும் போது கிராமத்துத் தலையாரி அங்கே வந்தான்.
லட்சுமி உங்க ஐயா எங்கே?”
ஊருக்குப் போயிருக்காக
உங்க அம்மா?”
காட்டுக்கு போயிருக்காக
வந்தா தீர்வைய கொண்டு வந்து போடச் சொல்லு, தலையாரித் தேவரு வந்து தேடீட்டு போனாருன்னு சொல்லு
சரி என்ற பாவனையில் லட்சுமி தலையை ஆட்டினாள்.
மறுநாள் தலையாரி லட்சுமியின் அம்மா இருக்கும் போதே வந்து தீர்வை பாக்கியைக்
கேட்டான்.
ஐயா, அவரு ஊரிலே இல்லை. மணி முத்தாறு போயி அஞ்சு மாசமாச்சி. ஒரு தகவலையும் காணோம். மூணு வருஷமா மழை தண்ணி இல்லயே. நாங்க என்னத்தை வெச்சு உங்களுக்கு தீர்வை பாக்கியைக் கொடுப்போம்? ஏதோ காட்டிலே போய் கூலி வேலை செய்து இந்தக் கொளந்தைங்கள காப்பாத்ரதே பெரிய காரியம். உங்களுக்குத் தெரியாததா?”  என்றாள்.
இந்த வார்த்தைகள் தலையாரியின் மனசைத் தொடவில்லை. இந்த மாதிரியான வசனங்களைப் பலர் சொல்லிக் கேட்டவன் அவன்.
நாங்கள் என்ன செய்ய முடியும்மா இதுக்கு? இந்த வருஷம் எப்படியாவது கண்டிப்பா
தீர்வை போட்டுறனும். அப்புறம் எங்க மேல சடைச்சிப் புண்ணியம் இல்லை.” என்று
சொல்லிவிட்டுப் போய் விட்டான்.
3.
ஒருநாள் காலை வீட்டின் முன்னுள்ள மைதானத்தில் குழந்தைகள் உட்கார்ந்து பேசிக்
கொண்டிருந்தார்கள். தலையாரி நான்கு பேர் சகிதம் வீட்டை நோக்கி வந்தான்.
வந்தவர்கள் அந்த வீட்டுப்பக்கம் ஓடி வந்து பார்த்தார்கள். அவர்களுக்கு இது ஒரு
மாதிரி வேடிக்கையாக இருந்தது. தலையாரியும் சேர்ந்து பிடித்து ஒரு மாதிரி கழற்றி
நான்கு பேரும் கதவைத் தூக்கி தலையில் வைத்துக் கொண்டு புறப்பட்டார்கள். அந்தக்
குழந்தைகளுக்கு என்ன தோன்றியதோ தெரியவில்லை. ஒருவன் நாதஸ்வரம் வாசிப்பவனைப் போல் கைகளை வைத்துக் கொண்டுபீப்பீ..பீ...பீஎன்று சத்தம் காட்டி விரல்களை நீட்டிக் கொண்டு உடலைப் பின் வளைத்துத் துடைகளின் மேல் ஓங்கி அடிப்பதாக பாவனை செய்துதிடும்.. திடும்.. ததிக்குணம்..ததிக்குணஎன்று தவில் வாசிப்பவனைப் போல முழங்கினான். சீனிவாசனும் இதில் பங்கெடுத்துக் கொண்டான். இப்படி உற்சாகமாக குழந்தைகள் கதவைத் தூக்கிக் கொண்டு செல்கிறவர்களின் பின்னே ஊர்வலம் புறப்பட்டார்கள்.
தலையாரியால் இதைச் சகிக்க முடியவில்லை. “இப்போ போகிறீர்களா இல்லையா கழுதைகளேஎன்று கத்தினான். குழந்தைகள் ஓட்டம் பிடித்தன. அவர்கள் வீட்டுக்குத் திரும்பி வரும் போது லட்சுமி வாசல்படியில் உட்கார்ந்து அழுது கொண்டிருந்தாள். எல்லோரும் அரவம் செய்யாமல் அவளுக்குப் பக்கத்தில் வந்து உட்கார்ந்து கொண்டனர். ஒருவரும் ஒன்றும் பேசவில்லை. சீனிவாசனும் முகத்தை வருத்தமாக வைத்துக் கொண்டான். இப்படி வெகுநேரம் அவர்களால் இருக்க முடியவில்லை. தற்செயலாக ஒரு பெண், “நான் வீட்டுக்குப் போறேன்என்று எழுந்தாள். உடனே எல்லோரும் அங்கிருந்து புறப்பட்டுப் போய்விட்டார்கள். லட்சுமியும் சீனிவாசனும் மாத்திரம் அங்கிருந்தார்கள். வெகுநேரம் அவர்களும் ஒருவருக்கொருவர் பேசவில்லை.
கைக்குழந்தை அழும் குரல் கேட்கவே லட்சுமி உள்ளே திரும்பினாள். இதற்குள்
சீனிவாசன் அக்குழந்தையை எடுத்துக் கொள்ளப் போனான். குழந்தையைத் தொட்டதும்
கையைப் பின்னுக்கு இழுத்தான். அக்காவைப் பார்த்தான். லட்சுமியும் பார்த்தாள்.
பாப்பாவை தொட்டுப் பாரு அக்கா; உடம்பு சுடுதுஎன்றான். லட்சுமி தொட்டுப்
பார்த்தாள்; அனலாகத் தகித்தது.
சாயந்திரம் வெகுநேரம் கழித்து அம்மா தலையில் விறகுச் சுள்ளிகளுடன் வந்தாள்.
சுள்ளிகள் சேகரிக்கும் போது கையில் தேள் கொட்டி இருந்ததால் முகத்தில் வலி தோன்ற அமைதியாக வந்து குழந்தைகளின் பக்கம் அமர்ந்து கைக்குழந்தையை வாங்கிக் கொண்டாள். ‘உடம்பு சுடுகிறதே?’ என்று தனக்குள் கேட்டுக் கொண்டாள். இதற்குள் குழந்தைகள் காலையில் நடந்த சேதியை அம்மாவிடம் சொன்னார்கள்.
செய்தியைக் கேட்டதும் ரங்கம்மாவுக்கு மூச்சே நின்று விடும் போலிருந்தது.
உடம்பெல்லாம் கண்ணுத் தெரியாத ஒரு நடுக்கம். வயிற்றில் தாங்க முடியாத ஒரு வலி தோன்றியது போல் குழந்தையை இறுகப் பிடித்துக் கொண்டாள். குழந்தைகளுக்கு முன் அழக் கூடாது என்று எவ்வளவு தான் அடக்கினாலும் முடியவில்லை. “என்னைப் பெத்த தாயேஎன்று அலறி விட்டாள். பயத்தினால் குழந்தைகள் அவள் பக்கத்தில்இருந்து விலகிக் கொண்டார்கள். இனம் புரியாத பயத்தின் காரணமாக அவர்களும் அழ ஆரம்பித்தனர்.
4.
மணிமுத்தாறிலிருந்து ஒரு தகவலும் வரவில்லை. நாட்கள் சென்று கொண்டேயிருந்தன. இரவு வந்து விட்டால் குளிர் தாங்க முடியாமல் குழந்தைகள் நடுங்குவார்கள். கதவு இல்லாததால் வீடு இருந்தும் பிரயோஜனமில்லாமல் இருந்தது. கார்த்திகை மாசத்து வாடை, விஷக் காற்றைப் போல் வீட்டினுள் வந்து அலைமோதிக் கொண்டே இருந்தது. கைக்குழந்தையின் ஆரோக்கியம் கெட்டுக் கொண்டே வந்தது. ஒரு நாள் இரவு வாடை தாங்காமல் அது அந்த வீட்டை விட்டு அவர்களையும் விட்டு பிரிந்து சென்று விட்டது. ரங்கம்மாளின் துயரத்தை அளவிட்டுச் சொல்ல முடியாது. லட்சுமிக்காகவும் சீனிவாசனுக்காகவுமே அவள் உயிர் தரித்திருந்தாள்.
சீனிவாசன் இப்பொழுது பள்ளிக்கூடம் போகிறான். ஒருநாள் அவன் மத்தியானம் பள்ளிக் கூடத்திலிருந்து திரும்பும் போது ஒரு தீப்பெட்டிப் படம் கிடைத்தது. கொண்டுவந்து தன் அக்காவிடம் காண்பித்தான். லட்சுமி அதில் ஆர்வம் கொள்ளவில்லை.
அக்கா எனக்கு சீக்கிரம் கஞ்சி ஊத்து, பசிக்கி; சாப்பிட்டு இந்த படத்தை
ஒட்டனும்
தம்பீ, கஞ்சி இல்லை”  இதை அவள் மிகவும் பதட்டத்தோடு சொன்னாள்.
ஏன்? நீ காலையில் காய்ச்சும் போது நான் பாத்தேனே?”
ஆம்என்ற முறையில் தலையசைத்து விட்டு, “நான் வெளிக்குப் போயிருந்தேன். ஏதோ
நாய் வந்து எல்லாக் கஞ்சியையும் குடித்து விட்டுப் போய்விட்டது தம்பி... கதவு
இல்லையேஎன்றாள் துக்கமும் ஏக்கமும் தொனிக்க. தன்னுடைய தாய் பசியோடு
காட்டிலிருந்து வருவாளே என்று நினைத்து உருகினாள் லட்சுமி.
சீனிவாசன் அங்கே சிதறிக் கிடந்த கம்மம் பருக்கைகளை எடுத்துப் படத்தின்
பின்புறம் தேய்த்து ஒட்டுவதற்கு வந்தான். கதவு இல்லை. என்ன செய்வதென்றே
தெரியவில்லை. சுவரில் ஒட்டினான். படம் கீழே விழுந்து விட்டது. அடுத்த இடத்தில்,
அடுத்த சுவரில் எல்லாம் ஒட்டிப் பார்த்தான்; ஒன்றும் பிரயோசனம் இல்லை.
ஏமாற்றத்தாலும் பசியாலும் அவன் அழ ஆரம்பித்தான்.
சாயந்திரம் லட்சுமி சட்டி பானைகளைத் தேய்த்துக் கழுவிக் கொண்டிருந்தாள்.
சீனிவாசன் முகத்தில் ஆவல் துடிக்க, மேல்மூச்சு கீழ்மூச்சு வாங்க ஓடி வந்தான்.
அக்கா அக்கா நம்ம பள்ளிக் கூடத்துக்கு பக்கத்திலே சாவ்டி இருக்கு பாரு..
அதுக்கு பின்புறம் நம்ம வீட்டு கதவு இருக்கக்கா! கண்ணாலே நான் பார்த்தேன்
என்றான்.
அப்படியா! நிஜமாகவா? எங்கே வா பாப்போம்என்று சீனிவாசனின் கையைப் பிடித்தாள்.
இருவரும் கிராமச்சாவடி நோக்கி ஓடினார்கள்.
உண்மை தான். அதே கதவு சாத்தப்பட்டு இருந்தது. தூரத்திலிருந்தே தங்கள் நண்பனை
இனம் கண்டு கொண்டார்கள் அச்சிறுவர்கள். பக்கத்தில் யாராவது இருக்கிறார்களா
என்று சுற்றும் முற்றும் பார்த்தார்கள். ஒருவரும் இல்லை.
அவர்களுக்கு உண்டான ஆனந்தத்தைச் சொல்ல முடியாது.
அங்கே முளைத்திருந்த சாரணத்தியும் தைவாழைச் செடிகளும் அவர்கள் காலடியில்
மிதிபட்டு நொறுங்கின. அதிவேகமாய் அந்தக் கதவின் பக்கம் பாய்ந்தார்கள். அருகில்
போய் அதைத் தொட்டார்கள். தடவினார்கள். அதில் பற்றி இருந்த கரையான் மண்ணை
லட்சுமி தன் பாவாடையால் தட்டித் துடைத்தாள்.
கதவோடு தன் முகத்தை ஒட்ட வைத்துக் கொண்டாள். அழவேண்டும் போலிருந்தது அவளுக்கு.
சீனிவாசனைக் கட்டிப் பிடித்துக் கொண்டாள். முத்தமிட்டாள். சிரித்தாள்.
கண்களிலிருந்து கண்ணீர் வழிந்தோடியது. சீனிவாசனும் லட்சுமியைப் பார்த்து
சிரித்தான். அவர்கள் இருவரின் கைகளும் கதவைப் பலமாகப் பற்றி இருந்தன.
*********
நன்றி: தாமரை (ஜனவரி 1959)  & http://azhiyasudargal.blogspot.com
குறிப்பு: நல்ல இலக்கியம் எல்லோரையும் சென்றடைய வேண்டும் என்ற நோக்கத்திலேயே இங்கு பதியப்படுகிறது. வேறு வணிக நோக்கம் எதுவுமில்லை. இதில் யாருக்கேனும் ஆட்சேபனை இருந்தால் தெரியப்படுத்தவும். அவற்றை நீக்கிவிடுகிறேன். படைப்புகளின் காப்புரிமை எழுத்தாளருக்கே