![]() |
வடவீர பொன்னையா
|
சிறு வயதில் என் தாத்தா சொல்லிக் கேட்ட வருச நாட்டு ஜமீன் கதையை பலவருடங்களுக்கு பின் படித்தாகிவிட்டது, புத்தகத்தை பரிசளித்த தம்பி பாரதிக்கு நன்றி. கதையை கீ.ரா போன்று அழகாக வட்டார பேச்சு வழக்கில் தேனி மண்ணின் வாசனையுடன் , மக்களின் உணர்வுகளையும் அதே ஒய்யார நடையில் எழுதியிருக்கிறார் வடவீர பொன்னையா. புத்தக அட்டையில் கண்டமனூர் ஜமீன் திருமலை ராமகிருஷ்ண சாமியப்ப நாயக்கர் ஆசை நாயகி ஜனகத்துடன் இருக்கும் புகைப்படத்தைபோட்டுவிட்டு, கட்டிய மனைவி வேலுத்தாயம்மாவுடன் இருக்கும் படத்தை நடுப்பக்கத்துக்கு பின் போட்டு கண்டமனூர் ஜமீன்தார்கள் எதற்கு முன்னுரிமை தந்தார்கள் என்பதை திரைப்படங்களின் மொத்த கதையை ஒன் லைனில் சொல்வதுபோல் வடவீர பொன்னையா ஜமீன்தார்களின் மொத்த வாழ்க்கை முறையை இரண்டு புகைப்படங்களின் வாயிலாக அழகாக சொல்லிவிட்டர்.
மன்னர் ஆட்சிக் காலத்தில் பாளையங்களாக இருந்தவை, ஆங்கிலேயர் ஆட்சியில்ஜமீன்களாக மாறின. இப்படி மாறிய 72 ஜமீன்களில் பெரிய ஜமீனாகவும் அதிக வரிவசூல் செய்யும் ஜமீனாகவும் விளங்கியது கண்டமனூர் ஜமீன். இதன் மொத்த சுற்றளவு 291 சதுரகிலோமீட்டர். ஆண்டு தோறும் ஆங்கிலேய அதிகாரிகளுக்கு கட்டிய கிஸ்தியின் (கப்பம்) மதிப்பு | 13,414 ஆகும்.
இந்த ஜமீன், பாளையமாக இருந்தபோது மௌஸயம் நாயக்கர்தான் முதல் பாளையக்காரராக இருந்துள்ளார். அடுத்து அவரது மகன் கொண்டலநாகம நாயக்கரும், அவரது மகன் வேலப்ப நாயக்கரும் இருந்துள்ளனர். கண்டமனூர் ஜமீன்1790 முதல் 1817 வரை பாளையமாக இருந்துள்ளது.
வேலப்ப நாயக்கர்தான் முதன்முதலாக கண்டமனூர் ஜமீன்தாராக ஆங்கிலேயரால் அங்கீகரிக்கப்பட்டு பட்டயச் சான்று பெற்றவர். வேலப்ப நாயக்கருக்கு குழந்தை இல்லை.ஆகவே அவரது தம்பியான இளைய வேலப்ப நாயக்கர் (எ )ஜமீன் ஆண்டி வேலப்பா நாயக்கர் 1817 முதல் 1830 வரையில் ஜமீன்தாராக இருந்தார்.
ஜமீன் ஆண்டி வேலப்பா நாயக்கர், அவர் மகன் ஜமீன் திருமலை ராமகிருஷ்ண சாமியப்ப நாயக்கர், அவர் மகன் டி.ஆர்.எஸ்.கதிர்வேல்சாமி பாண்டியன் (அ) "மைனர் பாண்டியன்" என இந்த மூன்று தலைமுறையில் ஜமீனில் நடக்கும் சம்பவங்கள் தான் கதை. சாபத்தால் சரிந்த ஒரு சாம்ராஜ்யத்தின் உண்மைக் கதை என்று ஆரம்பிக்கும் கதையை படித்து முடித்ததும், இது சாபத்தால் சரிந்த சாம்ராஜ்யமில்லை ஜாமீன்களின் சல்லாபத்தால் சரிக்கப்பட்ட சாம்ராஜ்யமாகவே எண்ணத் தோன்றுகிறது . கண்டமனூர் ஜமீன் முழுவதும் இன்று முற்றிலும் அழிந்து போவதற்கு முழுக் காரணம் சாபம் என்பதை விட ஜமீன்கள் மக்கள் நலனில் அக்கறை காட்டாமல் தங்கள் சுகத்துக்காக உல்லாசப் பிரியர்களாக பெண்கள் விசயத்தில் பாரபட்சம் பார்க்காமல் ஏக போகமா வாழ்ந்ததும், கணக்கு வழக்கு இல்லாமல் கடன் வாங்கியாதும், வறட்டு கவுரவமும் அவர்களின் தாந்தோன்றி தனமும்தான்.
ஆண்டி வேலப்பா நாயக்கர் அருள்மிகு மாவூற்று வேலப்பர் கோயிலுக்கு செல்லும் வழியில் பளியன் சித்தனின் அறிமுகம் கிடைக்கிறது, அவரது சித்து வேலையால் அவர்மீது ஒரு ஈர்ப்பு ஜமீனுக்கு, இவர்களது நட்பு ஜமீன் சொந்தங்கள் மத்தியில் எரிச்சலை ஏற்படுத்துகிறது, ஜமீன் ஒரு பஞ்சாயத்துக்கு ஒரு துப்பு வேண்டி பளியன் சித்தனிடம் குறி கேட்க அவரும் அவருடைய சக்தியால் அதை சொல்லுகிறார் அது ஒரு உயிரிழப்பில் (கொலையில்) முடிய, ஜமீன் சொந்தங்கள் பளியன் சித்தனின் மீது பழிசொல்லி ஜமீனுக்கு நெருக்கடி கொடுக்க அவரும் வேறு வழி இல்லாமல் பளியன் சித்தனையும் அவர் மனைவி மீனாட்சியையும் வருசநாட்டு மலைக்கு அனுப்புகிறார். அப்போது பளியன் சித்தன் ஒரு கொன்றை மரத்தை கொடுத்து ஜாமீன் அரண்மனைக்கு முன்னால் நடச் சொல்கிறார்.
![]() |
அருள்மிகு மாவூற்று வேலப்பர் கோவில் இன்றைய தோற்றம் |
இவர்கள் நட்பு இன்னூம் பலமாக வருசநாட்டு மலையில் வளர்கிறது அதுபோலவே கொன்றை மரமும் அரண்மனைக்கு முன்னால் வளர்கிறது. ஆண்டி வேலப்பா நாயக்கர் தன் ஆப்த நண்பன் பளியன் சித்தனிடமிருந்து பல சித்து வித்தைகளை கற்கிறார்,பளியன் சித்தனின் நட்பால் அவருடைய போக்கினில் நிறைய மாற்றங்களை ஏட்படுதுகிறது மிக தன்மையான மனிதராக மாறிவிட்டிருந்தர், இதை கண்டு ஜமீன் குடிகளும் மகிழ்கிறார்கள். பளியர் சித்தர் தனது கர்ப்பிணி மனைவி மீனாட்சியிடம் தான் நெடுநாளாக கேட்க நினைத்த ஒன்றை இன்று ஜமினிடம் கேட்க போகிறேன் என்று சொல்கிறார் மேலும் அன்றிரவு மீனாட்சியின் கண்களை துணியால் கட்டி மறுநாள் வரை திறக்ககூடாது என உத்தரவிடுகிறார். சித்தர் ஒரு அம்பில் நவபாசன விசத்தை தடவி வைத்துகொண்டு ஜமீன் வரவுக்காக காத்திருக்கிறார்.
வழக்கம்போல மாலை ஜமீன் ஆண்டி வேலப்பா நாயக்கர் வருகிறார், இருவரும் உணவருந்தி பேச ஆரம்பித்ததும் பளியன் சித்தன் தனக்கொரு வரம் வேண்டும் என்க்கேட்க, ஜமீனும் அதற்க்கென்ன சித்தா கேள் என்கிறார், பளியன் சித்தர் தனக்கும் தன் பளிய இனத்திற்கும் ஜமீன் இனத்தாருக்கு இணையான மதிப்பு & உரிமை வேண்டும் என கேட்க, ஜமீன் ஆண்டி வேலப்பா நாயக்கர் கோபத்தினால் சித்தன் விஷம் தடவிய அம்பை எடுத்து நாணேற்றி பளியன் சித்தன் மேல் எய்கிறார், உச்சந்தலையில் அம்பு தங்கி பளியன் சித்தர் மன்னா என் முடிவு உங்கள் கையால் இந்த அம்பினால்தான் முடியும் என்பதால்தான் அம்பு முனைகளில் விஷம் தடவி வைத்தேன். நாம் நட்பின் வலிமையால் இதை தவிர்க்க முடியும் என்று எண்ணினேன் ஆனால் விதி முந்திக்கொண்டது. எப்படி நான் என் மகனை காணும் முன் மடிகிறேனோ அதேபோல் நீங்களும் உங்கள் பரம்பரையும் தனயனின் முகம் பார்க்க தந்தை உயிருடன் இருக்க முடியாது என சொல்லி அப்படியே நவபாசன விஷம் வேலை செய்ய அந்த இடத்திலேயே பஸ்பமாகிவிட்டார். அப்படியே ஸ்தம்பித்து விட்டார் ஜமீன் ஆண்டி வேலப்பா நாயக்கர் ஒருநிமிட கோபத்தால் பெரிய பழியையும் தன் குலத்திற்கு அபகீர்த்தியையும்ஏற்படுத்திவிட்டேனே என கலங்கியவர். இனி எப்படி மீனாட்சி முகத்தை பார்க்கமுடியும் என்று பலவாறு அரற்றியவர் அங்கிருந்து அரண்மனை நோக்கி பயணப்பட்டார்.
கண்டமனூர் ஜமீன் அரண்மனைக்கு முன்னால் பளியன் சித்தன் கொடுத்து நடச்சொன்ன கொன்றை மரம் பளியன் சித்தன் இறந்த அதேநேரம் பட்டுப்போனது. அரண்மனைக்கு திரும்பிவந்த ஆண்டி வேலப்பா நாயக்கர் மேலும் வருத்தமுற்றவராய் மக்களின் மேல் கவனம் செலுத்த ஆரம்பித்தார். கிறுக்கு துறை என்று அதுவரை அழைத்த மக்கள் அவரை கடவுளாக வணங்க ஆரம்பித்தார்கள், ஜமிந்தார் 3 பெண்களை மணந்த நிலையில் குழந்தைப் பேறு இல்லை. இதனால் நான்காவதாக வெள்ளையம்மாள் என்ற பெண்ணை மணந்தார். வெள்ளையம்மாள் கர்ப்பமானபோது பட்டுப்போன கொன்றை மரம் ஒற்றைப்பூ பூத்தது. பளியனின் சாபமோ ஜமீன்தாரின் பயமோ எப்படியோ மகன் அவரது மனைவியின் வயிற்றில் சூழ் கொண்ட போதே ஜமீந்தார் ஆண்டி வேலப்பா நாயக்கர் இறந்து போகிறார். கண்டமனூர் ஆற்று பாலத்தின் பக்கத்தில் ஜமீந்தார் ஆண்டி வேலப்பா நாயக்கரின் கல்லறையை இப்போதும் கூட கானலாம்.
கர்ப்பிணியான வெள்ளையம்மாளிடம் ஜமீன் பொறுப்பை வழங்கக்கூடாது என வேலப்ப நாயக்கரின் தூரத்து உறவினர் ராமசாமி நாயக்கர் வழக்குத் தொடர்ந்துள்ளார். இதை விசாரித்த ஆங்கிலேய அதிகாரிகள் வெள்ளையம்மாளுக்குப் பிறக்கும் குழந்தை ஆணாக இருந்தால் அந்தக் குழந்தைக்கே ஜமீன் வாரிசாகும் தகுதி உண்டு எனவும், பெண் குழந்தை என்றால் ராமசாமி நாயக்கரை ஜமீனுக்கு அதிபதியாக்குவது குறித்து பரிசீலிக்கலாம் என்றும் கூறிவிட்டனராம்.
இந்தப் பிரச்னையால் 1866 முதல் 1888 வரையில் கண்டமனூர் ஜமீன் ஆங்கிலேய அதிகாரிகளால் நேரடிப் பொறுப்பில் இருந்தது. பின்னர் வெள்ளையம்மாளுக்கு ஆண் குழந்தை பிறந்தது. அவர்தான் திருமலை ராமகிருஷ்ண சாமியப்ப நாயக்கர்.
திருமலை ராமகிருஷ்ண சாமியப்ப நாயக்கரின் கல்வி ஆங்கிலேய அதிகாரிகளின் ஏற்பாடுபடி மதராசில் அமைந்தது. இவருடன் திருவாதங்கூர் இளவரசரும், எட்டயபுரம் ஜமிந்தாரும் சமகாலத்தில் படித்தவர்கள். திருமலை ராமகிருஷ்ண சாமியப்ப நாயக்கர் இங்கு படித்ததினால் ஆங்கில மொழிப்புலமையும் , ஆங்கிலேய நாகரிகத்தில் சிறிது ஈடுபாடு உள்ளவராயிருந்தார். படிப்பு முடிந்ததும் உரிய வயதில் ஜமீன் பொறுப்பேற்றார், சிறுவயதில் அதிக அதிகாரம் பெரிய பதவி, ஆங்கிலேய நாகரிக மயக்கம் இவைஅனைத்தும் அவரை நாட்டியக்காரி ஜனகத்திடம் கொண்டு சேர்த்தது. ஜனகத்தை மதராசில் இருந்து கூட்டிகொண்டு வந்து அவருக்காக வாணிமஹால் என்று ஒரு சிறிய அரண்மனையை கண்டமனூர் வைகை ஆற்றின்கரையில் அமைத்துக்கொடுத்தார். இவருடைய நடவடிக்கைகளால் நொந்துபோன இவருடைய அம்மாவும், மாப்பிளை நாயக்கர் வம்சத்தினரும் வற்ப்புறுத்தி திருமணம் செய்து வய்த்த பெண்தான் வேலுத்தாயம்மாள். இவர்கள் இவருக்கு முதல் பெண் குழந்தையாக கதிர்வேல் தாயம்மாள் என்ற ராஜமாணிக்கம் பிறந்தார், குழந்தை பிறக்கும் வரை சாபத்தை எண்ணி பயத்தால் பலமுறை செத்துபிழைத்தார் திருமலை ராமகிருஷ்ண சாமியப்ப நாயக்கர்.
குழந்தை பிறந்தபின்பு சாபம் தன்னை ஒன்றும் செய்யவில்லை என்று மேலும் தன்னுடைய உல்லாச வாழ்கையை தொடர்ந்தார் இதனால் பட்ட கடனுக்கு தன் சொத்துகளை ஏலத்தில் எட்டயபுரம் ஜமினிடம் இழந்தார். இதனால் வெகுண்டெழுந்த வேலுத்தாயம்மாள் தன் அண்ணன் முறையினரும் ஜமினுக்காக எதையும் செய்யும் மாப்ளை நாயகர் வம்சத்தினை சேர்ந்த ஒருவரிடம் துப்பாக்கி கொடுத்து ஜனகத்தை கொல்ல செய்தார். அன்றைய நிலையிலேயே பெண்கள் விழிப்படைந்தார்கள் என்பதாக சித்தரிக்கப்பட்டிருப்பவர் வேலுத்தாயம்மா கணவரின் பொறுப்பற்ற நிலையினால் வெறுப்படைந்து சுகபோகியாக இருக்கும் கணவனை விட்டுச் சென்று தெப்பம்பட்டி சின்ன அரண்மனையில் வாழ்கிறார், மீண்டும் சிலகாலம் சென்று சுகபோகத்தினாலும், கடனாலும் நோயுற்றவராக திரும்பி வரும் சாமியப்ப நாயக்கர் அவரிடம் மன்னிப்பு கேட்டு அவரிடம் ஒன்றாக தெப்பம்பட்டியில் வாழ்கிறார், இதன் பயனாக இரண்டாம் முறையாக வேலுத்தாயம்மா கருவுருகிறார் , அதே நேரம் கண்டமனூர் ஜமீன் அரண்மனைக்கு முன்னால் பளியன் சித்தன் கொடுத்து நடச்சொன்ன பட்டுப்போன கொன்றை மரமும் அமைதியாக ஒற்றைப்பூ ஒன்றை பூக்க செய்து தன்கடமையை செய்கிறது. குழைந்தை வேலுத்தாயம்மாள் வயிற்றில் வளர வளர சாமியப்ப நாயக்கர் நோயும் வளர்கிறது. தான் இலந்த ஜமீனை திரும்பப்பெற தன்னுடன் படித்த திருவிதாங்கூர் இளவரசரை காண குடும்பத்துடன் புறப்பட சாமியப்ப நாயக்கர் அவருடைய நண்பர் உத்தமபாளையம் மக்கா ராவுத்தர் வீட்டில் மரணமடைகிறார்.
இவர் கல்லறையும் ஆற்று பாலத்தின் பக்கத்தில் ஜமீந்தார் ஆண்டி வேலப்பா நாயக்கரின் கல்லறையை ஒட்டி அமைக்கப் படுகிறது. மிண்டும் ஜமீன் பொறுப்பை யார் வகிப்பது என்ற பஞ்சாயத்து தெப்பம்பட்டி வீட்டில் நடக்கிறது, மதுரையில் இருந்து ஒரு ஆங்கிலேய அதிகாரியும், ஒரு மொழிபெயர்ப்பாளனும் வந்திருந்தார்கள் வேலுத்தாயம்மா திரைக்கு பின்னல் அமர்ந்துகொண்டு சமஸ்கிருதம் கலந்த தெலுங்கில் அவர்களுடன் வாரிசுரிமைக்கு வாதாடி கொண்டிருந்தார், தனக்கு பிறக்க போவது ஆண் குழந்தைதான் அவனுக்குதான் வாரிசுரிமையென, அவர்களும் சரி பிறப்பது ஆண் இல்லாவிட்டால் பின்பு பார்க்கலாம் என சென்றுவிட்டார்கள். சில நாட்களில் வேலுத்தாயம்மாள் ஒரு ஆண் மகனை பெற்றெடுத்தார் ஆண் குழந்தைக்கு டி.ஆர்.எஸ்.கதிர்வேல்சாமி பாண்டியன் எனப் பெயரிட்டனர் ("மைனர் பாண்டியன்").
மிண்டும் பஞ்சாயத்து தெப்பம்பட்டி வீட்டில் நடக்கிறது இந்த முறை ஆங்கிலேய அதிகாரி தன்னுடன் எட்டயபுரம் ஜமிந்தாரையும் அழைத்து வந்திருந்தார் இம்முறை அவர்கள் சிறுவனை அவன் வளரும்வரை மதராசில் படிக்க வைக்கவும், அதுவரை ஜமீன் பொறுப்பை ஆங்கிலேய அதிகாரி வைத்து நிர்வாகிப்பதாகவும் சொன்னார்கள், ஆனால் வேலுத்தாயம்மா இதை மறுத்து தன் மகன் வளரும்வரை தானே ஜமீனின் தலைமைப் பொறுப்பை கவனித்துக்கொள்வதாக கூறுகிறார் . அப்போது அந்த ஆங்கிலேய அதிகாரி திரைக்கு பின்னாலிருந்து பேசும் பெண்ணால் எப்படி இந்த ஜமீனை நிர்வாகிக்க முடியும் என கேட்டதும் வேலுத்தாயம்மா பட்டென அந்த திரையை நீக்கிய வேகத்தில் அனைவரும் திகைத்துவிட்டார்கள். கடைசியில் மைனர் பாண்டியன் வளரும் வரை ஜமீன் பொறுப்பை வேலுத்தாயம்மாவே வகிப்பது என முடிவானது. மைனர் பாண்டியனை மதராசில் படிக்கவைக்க எட்டயபுரம் ஜமிந்தாரும் எவ்வளவோ சொல்லிப்பார்த்தார் ஆனால் தன் கணவன் மதராஸ் படிப்பாலேயே கெட்டுவிட்டார் அதனால் என்மகனை நானே பார்த்துகொள்கிறேன் என பிடிவாதமாக சொல்லிவிட்டார்.
இப்படியாக வேலுத்தாயம்மாள் ஜமீனின் தலைமைப் பொறுப்பில் அமர்ந்தார், கணக்கு வழக்குகளை மொட்டனூத்து வேலுச்சாமி நாயக்கர் பார்த்துக்கொண்டார், பின்பு வேலுத்தாயம்மாவும் மொட்டனூத்துக்கு குடிவந்துவிட்டார் இங்கிருக்கும்போதுதான் மைனர் பாண்டியனின் சகோதரியான ராஜாமணியை எரசக்கநாயக்கனூர் ஜமீனில் திருமணம் செய்துகொடுத்தனர். மொட்டனூத்து வேலுச்சாமி நாயக்கர்தான் டி.ஆர்.எஸ்.கதிர்வேல்சாமி பாண்டியன் (அ) "மைனர் பாண்டியன்" -னை கொம்பு சீவி-விட்டு மைனராக வளர்த்தார் இது வேலுத்தாயம்மாவுக்கு பிடிக்கவில்லை பின்பு மகனின் மீது கொண்ட வெறுப்பால் மகள் ராஜாமணியுடன் எரசக்கநாயக்கனூர் ஜமீனிக்கு சென்றுவிட்டார்.
(பின்பு வரிகட்ட முடியாத ஜமீன் நிர்வாகத்தை, ஆங்கில அரசே எடுத்துக்கொண்டு குர்த் எனும் ஆங்கிலேயரை அரசு நிர்வாகியாக்குகின்றது. ஆங்கிலேய அரசு அவ்வட்டாரத்தை வளப்படுத்த முதலீடு செய்ய முன்வராது என்பதைப் புரிந்துகொண்ட குர்த் துரை, அப்பகுதியில் பாண்டியர் காலத்துப் புதையல்களும், பொக்கிசங்களும் இருப்பதாகக் கூறி, ஏழு கிராமங்களையும், வளமான மலை நிலங்களையும் ஐந்தரை இலட்சம் ரூபாய்க்கு பம்பாய் சேட்களை (பட்டேல் சகோதரர்கள்) ஏலத்தில் எடுக்க வைக்கின்றார். நிலங்களை அளந்து குர்த் துரை முறைப்படுத்திக் கொடுக்க, கொஞ்ச நிலங்களை உள்ளூர் வாசிகள் வாங்குகின்றார்கள். மேற்கு நோக்கி ஓடும் ஆறுகளை பென்னி குயிக் பாணியில் கிழக்கே திருப்பி நீராதரங்களை வளப்படுத்த குர்த் சொன்ன யோசனைகளை சேட்டுக்கள் ஏற்காததால், மனமுடைந்து போகிறார். பட்டேல் சகோதரர்களிடமிருந்து பின் கோவை பி.எஸ்.ஜி சகோதரர்கள் நிலத்தை வாங்குகின்றனர். மனிதாபிமானமும், நவீனத்துவமும் கலந்த அவர்களின் நிர்வாக முறைகள் விவசாயத்திற்கு உந்துவிசை தர ஆரம்பித்தது.)
மைனர் பாண்டியன்1906 முதல் ஜமீன்தாரி ஒழிப்பு முறை செயல்படும் வரையில் ஜமீனாக வலம் வந்தார் மிச்சமிருந்த சொத்துகள் அனைத்தையும் இழந்து தன் முன்னோர்களை புதைத்த இடத்தைகூட விற்று. ஆண் அழகனாக வர்ணிக்கப்பட்டவர் இறுதில் பெருநோய் வந்து உருவம் சிதைந்து சிலகாலம் வேலப்பர் கோவில் மலை குகையில் வாழ்த்து இறந்தார். அதேநேரம் பளியன் சித்தன் கொடுத்து நடச்சொன்ன பட்டுப்போன கொன்றை மரமும் சாய்ந்து விழுகிறது. டி.ஆர்.எஸ்.கதிர்வேல்சாமி பாண்டியனின் உடலை புதைக்க இடம் இல்லாதால் அவர் உடல் வைகை கரையில் சாய்ந்து விழுந்த கொன்றை மர விறகால் எரிக்கபட்டது.
![]() |
கண்டமனூர் ஜமீன் அரண்மனையின் இன்றைய தோற்றம் |