Sunday, April 6, 2014

வருசநாட்டு ஜமீன் கதை (Varusa Nattu Jameen Kathai)



வடவீர பொன்னையா

சிறு வயதில் என் தாத்தா சொல்லிக் கேட்ட வருச நாட்டு ஜமீன் கதையை பலவருடங்களுக்கு பின் படித்தாகிவிட்டது, புத்தகத்தை பரிசளித்த தம்பி பாரதிக்கு நன்றி. கதையை  கீ.ரா போன்று அழகாக வட்டார பேச்சு வழக்கில் தேனி மண்ணின் வாசனையுடன் , மக்களின் உணர்வுகளையும் அதே ஒய்யார நடையில் எழுதியிருக்கிறார்  வடவீர பொன்னையா.  புத்தக அட்டையில்  கண்டமனூர் ஜமீன்  திருமலை ராமகிருஷ்ண சாமியப்ப நாயக்கர்  ஆசை நாயகி  ஜனகத்துடன்  இருக்கும்  புகைப்படத்தைபோட்டுவிட்டு, கட்டிய மனைவி வேலுத்தாயம்மாவுடன் இருக்கும் படத்தை நடுப்பக்கத்துக்கு பின் போட்டு கண்டமனூர் ஜமீன்தார்கள் எதற்கு முன்னுரிமை  தந்தார்கள் என்பதை திரைப்படங்களின் மொத்த கதையை   ஒன் லைனில்  சொல்வதுபோல் வடவீர பொன்னையா ஜமீன்தார்களின் மொத்த வாழ்க்கை முறையை இரண்டு புகைப்படங்களின் வாயிலாக அழகாக சொல்லிவிட்டர்.    


 


 மன்னர் ஆட்சிக் காலத்தில் பாளையங்களாக இருந்தவை, ஆங்கிலேயர் ஆட்சியில்ஜமீன்களாக மாறின. இப்படி மாறிய 72 ஜமீன்களில் பெரிய ஜமீனாகவும் அதிக வரிவசூல் செய்யும் ஜமீனாகவும் விளங்கியது கண்டமனூர் ஜமீன். இதன் மொத்த சுற்றளவு 291 சதுரகிலோமீட்டர். ஆண்டு தோறும் ஆங்கிலேய அதிகாரிகளுக்கு கட்டிய கிஸ்தியின் (கப்பம்) மதிப்பு | 13,414 ஆகும்.

இந்த ஜமீன், பாளையமாக இருந்தபோது மௌஸயம் நாயக்கர்தான் முதல் பாளையக்காரராக இருந்துள்ளார். அடுத்து அவரது மகன் கொண்டலநாகம நாயக்கரும், அவரது மகன் வேலப்ப நாயக்கரும் இருந்துள்ளனர். கண்டமனூர் ஜமீன்1790 முதல் 1817 வரை பாளையமாக இருந்துள்ளது.

வேலப்ப நாயக்கர்தான் முதன்முதலாக கண்டமனூர் ஜமீன்தாராக ஆங்கிலேயரால் அங்கீகரிக்கப்பட்டு பட்டயச் சான்று பெற்றவர். வேலப்ப நாயக்கருக்கு குழந்தை இல்லை.ஆகவே அவரது தம்பியான இளைய வேலப்ப நாயக்கர்  (எ )ஜமீன் ஆண்டி வேலப்பா நாயக்கர்  1817  முதல் 1830  வரையில் ஜமீன்தாராக இருந்தார்.

ஜமீன் ஆண்டி வேலப்பா நாயக்கர், அவர் மகன் ஜமீன்  திருமலை ராமகிருஷ்ண சாமியப்ப நாயக்கர், அவர் மகன் டி.ஆர்.எஸ்.கதிர்வேல்சாமி பாண்டியன் (அ) "மைனர் பாண்டியன்" என இந்த மூன்று தலைமுறையில் ஜமீனில் நடக்கும் சம்பவங்கள் தான் கதை. சாபத்தால் சரிந்த ஒரு சாம்ராஜ்யத்தின் உண்மைக் கதை என்று ஆரம்பிக்கும் கதையை படித்து முடித்ததும்,   இது  சாபத்தால் சரிந்த சாம்ராஜ்யமில்லை ஜாமீன்களின்  சல்லாபத்தால் சரிக்கப்பட்ட  சாம்ராஜ்யமாகவே எண்ணத் தோன்றுகிறது  . கண்டமனூர் ஜமீன்  முழுவதும் இன்று முற்றிலும்  அழிந்து போவதற்கு முழுக் காரணம் சாபம் என்பதை விட ஜமீன்கள் மக்கள் நலனில் அக்கறை காட்டாமல் தங்கள் சுகத்துக்காக  உல்லாசப் பிரியர்களாக  பெண்கள் விசயத்தில் பாரபட்சம் பார்க்காமல் ஏக போகமா வாழ்ந்ததும், கணக்கு வழக்கு இல்லாமல் கடன் வாங்கியாதும், வறட்டு கவுரவமும் அவர்களின்  தாந்தோன்றி  தனமும்தான்.     

  ஆண்டி வேலப்பா நாயக்கர்  அருள்மிகு மாவூற்று வேலப்பர் கோயிலுக்கு செல்லும் வழியில் பளியன் சித்தனின் அறிமுகம் கிடைக்கிறது, அவரது சித்து வேலையால்  அவர்மீது ஒரு ஈர்ப்பு ஜமீனுக்கு,  இவர்களது நட்பு ஜமீன் சொந்தங்கள் மத்தியில் எரிச்சலை ஏற்படுத்துகிறது, ஜமீன் ஒரு பஞ்சாயத்துக்கு ஒரு துப்பு வேண்டி பளியன் சித்தனிடம் குறி கேட்க  அவரும் அவருடைய சக்தியால் அதை சொல்லுகிறார் அது ஒரு உயிரிழப்பில்  (கொலையில்) முடிய, ஜமீன் சொந்தங்கள்  பளியன் சித்தனின்  மீது பழிசொல்லி ஜமீனுக்கு நெருக்கடி கொடுக்க அவரும் வேறு வழி இல்லாமல்   பளியன் சித்தனையும் அவர் மனைவி மீனாட்சியையும் வருசநாட்டு மலைக்கு அனுப்புகிறார். அப்போது பளியன் சித்தன் ஒரு கொன்றை மரத்தை கொடுத்து ஜாமீன் அரண்மனைக்கு முன்னால் நடச் சொல்கிறார்.  



அருள்மிகு மாவூற்று வேலப்பர் கோவில் இன்றைய தோற்றம்


இவர்கள் நட்பு இன்னூம் பலமாக வருசநாட்டு மலையில் வளர்கிறது  அதுபோலவே கொன்றை மரமும் அரண்மனைக்கு முன்னால் வளர்கிறது.   ஆண்டி வேலப்பா நாயக்கர் தன் ஆப்த நண்பன் பளியன் சித்தனிடமிருந்து பல சித்து வித்தைகளை கற்கிறார்,பளியன் சித்தனின் நட்பால் அவருடைய போக்கினில் நிறைய  மாற்றங்களை  ஏட்படுதுகிறது மிக தன்மையான மனிதராக மாறிவிட்டிருந்தர், இதை கண்டு ஜமீன் குடிகளும் மகிழ்கிறார்கள். பளியர் சித்தர் தனது  கர்ப்பிணி மனைவி மீனாட்சியிடம் தான் நெடுநாளாக கேட்க நினைத்த ஒன்றை இன்று ஜமினிடம் கேட்க போகிறேன் என்று சொல்கிறார் மேலும் அன்றிரவு  மீனாட்சியின் கண்களை துணியால் கட்டி மறுநாள் வரை திறக்ககூடாது  என  உத்தரவிடுகிறார். சித்தர் ஒரு அம்பில் நவபாசன விசத்தை தடவி வைத்துகொண்டு ஜமீன் வரவுக்காக காத்திருக்கிறார்.                    

வழக்கம்போல மாலை ஜமீன் ஆண்டி வேலப்பா நாயக்கர் வருகிறார், இருவரும் உணவருந்தி பேச ஆரம்பித்ததும் பளியன் சித்தன் தனக்கொரு வரம் வேண்டும் என்க்கேட்க, ஜமீனும் அதற்க்கென்ன  சித்தா கேள்  என்கிறார், பளியன் சித்தர் தனக்கும் தன் பளிய இனத்திற்கும் ஜமீன் இனத்தாருக்கு இணையான  மதிப்பு & உரிமை வேண்டும் என  கேட்க, ஜமீன் ஆண்டி வேலப்பா நாயக்கர் கோபத்தினால்  சித்தன் விஷம் தடவிய அம்பை எடுத்து நாணேற்றி பளியன் சித்தன் மேல் எய்கிறார், உச்சந்தலையில் அம்பு தங்கி  பளியன் சித்தர் மன்னா என் முடிவு உங்கள் கையால் இந்த அம்பினால்தான் முடியும் என்பதால்தான் அம்பு முனைகளில் விஷம் தடவி வைத்தேன். நாம் நட்பின் வலிமையால் இதை தவிர்க்க முடியும் என்று எண்ணினேன் ஆனால் விதி  முந்திக்கொண்டது. எப்படி நான் என் மகனை காணும் முன் மடிகிறேனோ அதேபோல்  நீங்களும் உங்கள் பரம்பரையும் தனயனின் முகம் பார்க்க தந்தை உயிருடன் இருக்க முடியாது என சொல்லி அப்படியே நவபாசன விஷம் வேலை செய்ய அந்த இடத்திலேயே      பஸ்பமாகிவிட்டார். அப்படியே ஸ்தம்பித்து விட்டார் ஜமீன் ஆண்டி வேலப்பா நாயக்கர்  ஒருநிமிட கோபத்தால் பெரிய பழியையும் தன் குலத்திற்கு அபகீர்த்தியையும்ஏற்படுத்திவிட்டேனே என கலங்கியவர். இனி   எப்படி மீனாட்சி முகத்தை பார்க்கமுடியும் என்று பலவாறு அரற்றியவர் அங்கிருந்து அரண்மனை நோக்கி பயணப்பட்டார்.  

கண்டமனூர் ஜமீன்  அரண்மனைக்கு முன்னால் பளியன் சித்தன் கொடுத்து நடச்சொன்ன கொன்றை மரம் பளியன் சித்தன் இறந்த அதேநேரம் பட்டுப்போனது. அரண்மனைக்கு திரும்பிவந்த ஆண்டி வேலப்பா நாயக்கர் மேலும் வருத்தமுற்றவராய் மக்களின் மேல் கவனம் செலுத்த ஆரம்பித்தார். கிறுக்கு துறை என்று அதுவரை அழைத்த மக்கள் அவரை கடவுளாக வணங்க ஆரம்பித்தார்கள், ஜமிந்தார்  3 பெண்களை மணந்த நிலையில் குழந்தைப் பேறு இல்லை. இதனால் நான்காவதாக வெள்ளையம்மாள் என்ற பெண்ணை மணந்தார். வெள்ளையம்மாள் கர்ப்பமானபோது பட்டுப்போன கொன்றை மரம் ஒற்றைப்பூ பூத்தது. பளியனின் சாபமோ ஜமீன்தாரின்   பயமோ எப்படியோ  மகன் அவரது மனைவியின் வயிற்றில் சூழ் கொண்ட போதே ஜமீந்தார் ஆண்டி வேலப்பா நாயக்கர் இறந்து போகிறார்.  கண்டமனூர் ஆற்று பாலத்தின் பக்கத்தில்  ஜமீந்தார் ஆண்டி வேலப்பா நாயக்கரின் கல்லறையை  இப்போதும் கூட  கானலாம்.

கர்ப்பிணியான வெள்ளையம்மாளிடம் ஜமீன் பொறுப்பை வழங்கக்கூடாது என வேலப்ப நாயக்கரின் தூரத்து உறவினர் ராமசாமி நாயக்கர் வழக்குத் தொடர்ந்துள்ளார். இதை விசாரித்த ஆங்கிலேய அதிகாரிகள் வெள்ளையம்மாளுக்குப் பிறக்கும் குழந்தை ஆணாக இருந்தால் அந்தக் குழந்தைக்கே ஜமீன் வாரிசாகும் தகுதி உண்டு எனவும், பெண் குழந்தை என்றால் ராமசாமி நாயக்கரை ஜமீனுக்கு அதிபதியாக்குவது குறித்து பரிசீலிக்கலாம் என்றும் கூறிவிட்டனராம்.

இந்தப் பிரச்னையால் 1866 முதல் 1888 வரையில் கண்டமனூர் ஜமீன் ஆங்கிலேய அதிகாரிகளால்  நேரடிப் பொறுப்பில் இருந்தது. பின்னர் வெள்ளையம்மாளுக்கு ஆண் குழந்தை பிறந்தது. அவர்தான் திருமலை ராமகிருஷ்ண சாமியப்ப நாயக்கர்.

திருமலை ராமகிருஷ்ண சாமியப்ப நாயக்கரின் கல்வி ஆங்கிலேய அதிகாரிகளின் ஏற்பாடுபடி   மதராசில் அமைந்தது. இவருடன் திருவாதங்கூர்  இளவரசரும், எட்டயபுரம் ஜமிந்தாரும்  சமகாலத்தில் படித்தவர்கள்.  திருமலை ராமகிருஷ்ண சாமியப்ப நாயக்கர் இங்கு படித்ததினால்  ஆங்கில மொழிப்புலமையும் , ஆங்கிலேய நாகரிகத்தில் சிறிது  ஈடுபாடு உள்ளவராயிருந்தார்.    படிப்பு முடிந்ததும் உரிய வயதில் ஜமீன் பொறுப்பேற்றார், சிறுவயதில் அதிக அதிகாரம் பெரிய பதவி, ஆங்கிலேய நாகரிக மயக்கம் இவைஅனைத்தும் அவரை நாட்டியக்காரி ஜனகத்திடம் கொண்டு சேர்த்தது. ஜனகத்தை மதராசில் இருந்து கூட்டிகொண்டு வந்து அவருக்காக வாணிமஹால் என்று ஒரு சிறிய அரண்மனையை கண்டமனூர் வைகை ஆற்றின்கரையில் அமைத்துக்கொடுத்தார். இவருடைய நடவடிக்கைகளால் நொந்துபோன  இவருடைய அம்மாவும், மாப்பிளை நாயக்கர்  வம்சத்தினரும் வற்ப்புறுத்தி  திருமணம் செய்து வய்த்த பெண்தான்  வேலுத்தாயம்மாள். இவர்கள் இவருக்கு முதல் பெண் குழந்தையாக கதிர்வேல் தாயம்மாள் என்ற ராஜமாணிக்கம் பிறந்தார், குழந்தை பிறக்கும் வரை  சாபத்தை எண்ணி பயத்தால் பலமுறை செத்துபிழைத்தார் திருமலை ராமகிருஷ்ண சாமியப்ப நாயக்கர்.

கண்டமனூர்  ஜமீன் கதை

 குழந்தை பிறந்தபின்பு சாபம் தன்னை  ஒன்றும் செய்யவில்லை என்று மேலும் தன்னுடைய உல்லாச வாழ்கையை தொடர்ந்தார் இதனால் பட்ட கடனுக்கு தன் சொத்துகளை ஏலத்தில் எட்டயபுரம் ஜமினிடம் இழந்தார். இதனால் வெகுண்டெழுந்த வேலுத்தாயம்மாள் தன் அண்ணன் முறையினரும் ஜமினுக்காக எதையும் செய்யும் மாப்ளை நாயகர் வம்சத்தினை சேர்ந்த ஒருவரிடம் துப்பாக்கி கொடுத்து ஜனகத்தை கொல்ல செய்தார். அன்றைய நிலையிலேயே பெண்கள் விழிப்படைந்தார்கள் என்பதாக சித்தரிக்கப்பட்டிருப்பவர் வேலுத்தாயம்மா கணவரின் பொறுப்பற்ற  நிலையினால்  வெறுப்படைந்து  சுகபோகியாக இருக்கும் கணவனை விட்டுச் சென்று தெப்பம்பட்டி சின்ன அரண்மனையில் வாழ்கிறார், மீண்டும் சிலகாலம் சென்று சுகபோகத்தினாலும், கடனாலும் நோயுற்றவராக  திரும்பி வரும்   சாமியப்ப நாயக்கர் அவரிடம் மன்னிப்பு கேட்டு அவரிடம் ஒன்றாக தெப்பம்பட்டியில் வாழ்கிறார், இதன் பயனாக இரண்டாம் முறையாக வேலுத்தாயம்மா கருவுருகிறார் , அதே நேரம் கண்டமனூர் ஜமீன்  அரண்மனைக்கு முன்னால் பளியன் சித்தன் கொடுத்து நடச்சொன்ன  பட்டுப்போன கொன்றை மரமும் அமைதியாக ஒற்றைப்பூ ஒன்றை பூக்க செய்து தன்கடமையை செய்கிறது. குழைந்தை வேலுத்தாயம்மாள் வயிற்றில் வளர வளர சாமியப்ப நாயக்கர் நோயும் வளர்கிறது. தான் இலந்த ஜமீனை திரும்பப்பெற தன்னுடன் படித்த திருவிதாங்கூர்  இளவரசரை காண குடும்பத்துடன் புறப்பட  சாமியப்ப நாயக்கர்  அவருடைய நண்பர் உத்தமபாளையம் மக்கா ராவுத்தர் வீட்டில் மரணமடைகிறார். 

 

   இவர் கல்லறையும் ஆற்று பாலத்தின் பக்கத்தில்  ஜமீந்தார் ஆண்டி வேலப்பா நாயக்கரின் கல்லறையை ஒட்டி அமைக்கப் படுகிறது.   மிண்டும் ஜமீன் பொறுப்பை யார் வகிப்பது என்ற பஞ்சாயத்து தெப்பம்பட்டி வீட்டில் நடக்கிறது, மதுரையில் இருந்து ஒரு ஆங்கிலேய அதிகாரியும், ஒரு  மொழிபெயர்ப்பாளனும்    வந்திருந்தார்கள் வேலுத்தாயம்மா திரைக்கு பின்னல் அமர்ந்துகொண்டு சமஸ்கிருதம் கலந்த  தெலுங்கில் அவர்களுடன் வாரிசுரிமைக்கு வாதாடி கொண்டிருந்தார், தனக்கு பிறக்க போவது ஆண் குழந்தைதான் அவனுக்குதான்  வாரிசுரிமையென, அவர்களும் சரி பிறப்பது ஆண் இல்லாவிட்டால் பின்பு பார்க்கலாம் என சென்றுவிட்டார்கள். சில நாட்களில் வேலுத்தாயம்மாள் ஒரு ஆண் மகனை  பெற்றெடுத்தார் ஆண் குழந்தைக்கு டி.ஆர்.எஸ்.கதிர்வேல்சாமி பாண்டியன் எனப் பெயரிட்டனர் ("மைனர் பாண்டியன்").

மிண்டும்  பஞ்சாயத்து தெப்பம்பட்டி வீட்டில் நடக்கிறது இந்த முறை  ஆங்கிலேய அதிகாரி தன்னுடன்  எட்டயபுரம் ஜமிந்தாரையும் அழைத்து வந்திருந்தார் இம்முறை அவர்கள்  சிறுவனை  அவன் வளரும்வரை மதராசில் படிக்க வைக்கவும், அதுவரை ஜமீன் பொறுப்பை ஆங்கிலேய அதிகாரி வைத்து நிர்வாகிப்பதாகவும் சொன்னார்கள், ஆனால் வேலுத்தாயம்மா இதை மறுத்து  தன் மகன் வளரும்வரை தானே   ஜமீனின் தலைமைப் பொறுப்பை கவனித்துக்கொள்வதாக கூறுகிறார் . அப்போது அந்த   ஆங்கிலேய அதிகாரி திரைக்கு பின்னாலிருந்து பேசும் பெண்ணால் எப்படி இந்த ஜமீனை நிர்வாகிக்க முடியும் என கேட்டதும் வேலுத்தாயம்மா பட்டென அந்த திரையை நீக்கிய வேகத்தில் அனைவரும் திகைத்துவிட்டார்கள். கடைசியில் மைனர் பாண்டியன் வளரும் வரை  ஜமீன் பொறுப்பை   வேலுத்தாயம்மாவே வகிப்பது என முடிவானது. மைனர் பாண்டியனை மதராசில் படிக்கவைக்க  எட்டயபுரம் ஜமிந்தாரும் எவ்வளவோ சொல்லிப்பார்த்தார் ஆனால் தன் கணவன் மதராஸ் படிப்பாலேயே கெட்டுவிட்டார் அதனால் என்மகனை நானே பார்த்துகொள்கிறேன்  என பிடிவாதமாக சொல்லிவிட்டார்.

 

இப்படியாக வேலுத்தாயம்மாள் ஜமீனின் தலைமைப் பொறுப்பில் அமர்ந்தார், கணக்கு வழக்குகளை மொட்டனூத்து வேலுச்சாமி  நாயக்கர்  பார்த்துக்கொண்டார், பின்பு வேலுத்தாயம்மாவும் மொட்டனூத்துக்கு குடிவந்துவிட்டார் இங்கிருக்கும்போதுதான் மைனர் பாண்டியனின் சகோதரியான ராஜாமணியை எரசக்கநாயக்கனூர் ஜமீனில் திருமணம் செய்துகொடுத்தனர்.  மொட்டனூத்து வேலுச்சாமி  நாயக்கர்தான்   டி.ஆர்.எஸ்.கதிர்வேல்சாமி பாண்டியன் (அ) "மைனர் பாண்டியன்" -னை கொம்பு சீவி-விட்டு  மைனராக வளர்த்தார் இது வேலுத்தாயம்மாவுக்கு பிடிக்கவில்லை பின்பு மகனின் மீது கொண்ட வெறுப்பால் மகள் ராஜாமணியுடன் எரசக்கநாயக்கனூர் ஜமீனிக்கு சென்றுவிட்டார். 

 

(பின்பு வரிகட்ட முடியாத ஜமீன் நிர்வாகத்தை, ஆங்கில அரசே எடுத்துக்கொண்டு குர்த் எனும் ஆங்கிலேயரை அரசு நிர்வாகியாக்குகின்றது. ஆங்கிலேய அரசு அவ்வட்டாரத்தை வளப்படுத்த முதலீடு செய்ய முன்வராது என்பதைப் புரிந்துகொண்ட குர்த் துரை, அப்பகுதியில் பாண்டியர் காலத்துப் புதையல்களும், பொக்கிசங்களும் இருப்பதாகக் கூறி, ஏழு கிராமங்களையும், வளமான மலை நிலங்களையும் ஐந்தரை இலட்சம் ரூபாய்க்கு பம்பாய் சேட்களை (பட்டேல் சகோதரர்கள்) ஏலத்தில் எடுக்க வைக்கின்றார். நிலங்களை அளந்து குர்த் துரை முறைப்படுத்திக் கொடுக்க, கொஞ்ச நிலங்களை உள்ளூர் வாசிகள் வாங்குகின்றார்கள். மேற்கு நோக்கி ஓடும் ஆறுகளை பென்னி குயிக் பாணியில் கிழக்கே திருப்பி நீராதரங்களை வளப்படுத்த குர்த் சொன்ன யோசனைகளை சேட்டுக்கள் ஏற்காததால், மனமுடைந்து போகிறார். பட்டேல் சகோதரர்களிடமிருந்து பின் கோவை பி.எஸ்.ஜி சகோதரர்கள் நிலத்தை வாங்குகின்றனர். மனிதாபிமானமும், நவீனத்துவமும் கலந்த அவர்களின் நிர்வாக முறைகள் விவசாயத்திற்கு உந்துவிசை தர ஆரம்பித்தது.)

 

மைனர் பாண்டியன்1906 முதல் ஜமீன்தாரி ஒழிப்பு முறை செயல்படும் வரையில்  ஜமீனாக வலம் வந்தார் மிச்சமிருந்த சொத்துகள் அனைத்தையும் இழந்து  தன் முன்னோர்களை புதைத்த இடத்தைகூட விற்று. ஆண் அழகனாக வர்ணிக்கப்பட்டவர் இறுதில் பெருநோய் வந்து உருவம் சிதைந்து சிலகாலம் வேலப்பர் கோவில் மலை குகையில் வாழ்த்து இறந்தார்.  அதேநேரம் பளியன் சித்தன் கொடுத்து நடச்சொன்ன  பட்டுப்போன கொன்றை மரமும் சாய்ந்து விழுகிறது.   டி.ஆர்.எஸ்.கதிர்வேல்சாமி பாண்டியனின் உடலை புதைக்க இடம் இல்லாதால் அவர் உடல்  வைகை கரையில்  சாய்ந்து விழுந்த கொன்றை மர விறகால்  எரிக்கபட்டது.  

கண்டமனூர் ஜமீன்  அரண்மனையின்   இன்றைய தோற்றம்

 மைனர் பாண்டி இறந்தது 1951-ஆம் வருடம். வேலுதாயம்மா இறந்தது 1956-ஆம் வருடம். மைனர் பாண்டியின் இறப்புச் சடங்கிலும் அவர் கலந்துக் கொள்ளவில்லை. அப்படி ஒரு மனோதிடமான பெண். கணக்கு வழக்குகளை சீராக எழுதி கையொப்பம்  இட்ட பிரதியையும் ஸ்கேன் செய்து போட்டிருக்கிறார்கள். இன்னும் பல விடயங்கள் பார்க்க படிக்க திகட்டாத தேனாக கொடுக்கப்பட்டிருக்கிறது.  இப்படியாக மூன்றாவது சாம்ராஜியத்தில் இருக்கும் ஜமீன் மைனர் பாண்டியன்  இறப்போடும் அதன் பின் இன்றளவில் அவர்களின் பரம்பரையினர் எப்படி இருக்கிறார்கள் என்பதாக கதை முடிக்கப்படுகிறது. 

 

 

உண்ணாம கெட்டுப் போச்சி உறவு,

பார்க்காம கெட்டுப் போச்சி பயிரு,

ஏறாம கெட்டுப் போச்சி குதிரை,

அடிக்காம கெட்டுப் போச்சு பிள்ளை,

முறுக்காம கெட்டுப்போச்சி மீசை.

 

சாபத்தோட வீரியத்துக்கு

சாம்ராச்யம் உரமாச்சு..

பூமியில பொதஞ்ச கதை

மறுபடியும் கருவாச்சு..

நல்ல சனங்க போற பாதையில

நல்ல விதை முளைக்கும்..

சரித்திரத்த சொல்லுகிற

சாட்சியாக இருக்கும்.. என்ற வடவீர பொன்னையாவின் வரிகளுடன் இந்த கட்டுரையை முடிக்கிறேன்.  

 

இந்த கதையை சுருக்கமாக நான் புத்தகத்தில் படித்தவை யையும், வாய்வழி  கதையாக கேட்டவையையும்,  மேலும் இணையத்தில் கிடைத்த தகவல்கலைக்கொண்டு உங்களுக்காக  தந்திருக்கிறேன்.  நல்ல  வரலாற்று கதைகள்  எல்லோரையும் சென்றடைய வேண்டும் என்ற நோக்கத்திலேயே இங்கு பதியப்படுகிறது. வேறு வணிக நோக்கம் எதுவுமில்லை. இதில் யாருக்கேனும் ஆட்சேபனை இருந்தால் தெரியப்படுத்தவும். அவற்றை நீக்கிவிடுகிறேன். படைப்புகளின் காப்புரிமை எழுத்தாளருக்கே. சொற் பிழை அல்லது   எழுத்துப்பிழைகள்/ தகவல் பிழைகள்  இருந்தால் மன்னித்து தயவுசெய்து எனக்கு தெரியப்படுத்துங்கள். இது கதையின் முன்னோட்டம்தான், முழு கதையை படிக்க முறையாக விலைகொடுத்து புத்தகம் வாங்கி படிக்கவும். 

 

புத்தகம்: வருச நாட்டு ஜமீன் கதை

ஆசிரியர்: வடவீர பொன்னையா

பதிப்பகம்: விகடன் பிரசுரம்

விலை: ரூ130.

 

 


நன்றி,

 

உங்கள் அன்புக்குரிய நண்பன்.

 

கோவிந்தராஜ்





Saturday, February 15, 2014

பண்ணைச் செங்கான் - கு ப ரா




"இதோ இந்த மாமரம் ஒங்க பாட்டன், மவராசன், வச்ச மரம். பனம் கல்கண்டு கணக்கா சுவையா இருக்கும் ! இந்தத் தென்ன மரம் அவரு கையாலே போட்ட நெத்து. இப்படித் தடத்தோடேயே வாங்க. வரப்புல நடந்து பளக்கமில்லே. பட்டண வாசத்துப் புள்ளே!" என்று வேகமாக விடாமல் பேசினான் செங்கான்.
நானும் அவனும் என் நிலத்தின் ஒரு புறத்து வரப்பின் மேல் நடந்து போய்க் கொண்டிருந்தோம்.
"இதை எப்போப்பா அறுக்கலாம்?" என்றேன்.
நிலத்தில் நின்ற பயிரைக் காட்டிக் கொண்டு செங்கான், " இன்னும் கொஞ்ச நாள் போவானுங்க. தொண்டேக் கதிர இருக்குது. கொஞ்சம் மேப்பக்கம் பூரா கதிரு வாங்கி நிக்குது.. இந்த மாமரத்து நெளலிலேயே குந்துங்க. , கங்காணி மவனே ! சின்னசாமிக்கு ரெண்டு எளனி புடுங்கியா!" என்றான்.
எனக்கு இளநீர் குடிக்கத் தெரியவில்லை. மேலேஎல்லாம் கொட்டிக் கொண்டு விட்டேன்.
"அந்த ஒலெய அளுத்திப் புடிச்சிக்கிட்டு, சட்டுன்னு சாச்சுக்கணும்" என்று செங்கான் சிரித்துகொண்டே கையால் செய்து காட்டினான்.
பறச்செங்கான்என் பாட்டனார் காலம் முதல் எங்கள் நிலத்தைச் சாகுபடி செய்கிறவன். சொக்கனூர் கிராமத்திலேயே அவன்தான் வயது முதிர்ந்த கிழவன். எண்பது வயது என்று பேச்சு. ஆனால் பார்த்தால் அறுபதிற்கு மேல் சொல்ல முடியாது. கையில் அவன் உயரமுள்ள மூங்கில் தடி. தடி எடுத்தவன் தோட்டி என்பார்கள்.ஆனால் செங்கான் தோட்டியல்ல. பழுப்பு நிலத்தில் பயிரேற்றிப் பிழைத்தான். தளதளவென்று செழித்திருந்த மார்பளவு பயிரின் நடுவில் சதா ஏதாவது வரப்பைக் கிண்டிக் கொண்டே இருப்பான்.
நிலத்தை விட்டு வெளியே வந்தாலும் அந்த தடி, இடுப்புக் கோவணந்தான்கறுப்பு கம்பளி ஒன்றைத் தலையிருந்து கால் வரை, மழைக்காலத்தில் சாக்கை மடித்துப் போட்டுக் கொள்வது போலப் போட்டுக் கொண்டிருப்பான். காலில்  செருப்பு, கறுத்த உடல் நரைத்த மீசையும் உச்சிக் குடுமியும்.
அம்மா சொகமாயிருக்கா ? நம்ம கொளந்தே நல்லா இருக்கா? ஏன், ஒரு வாட்டி அம்மாளைக் கூட்டியாந்தா என்ன?”
செங்கான் சற்றுத் தொலைவில் உட்கார்ந்து கொண்டு கால் செருப்பின் வாரை இறுக்கிக் கொண்டிருந்தான்.

2

காலாவதி காலத்தில் நான் வருசா வருசம் என் கிராமத்திற்குப் போயி விட்டு வருவது வழக்கம். நான் போகாவிட்டால் செங்கான் விட மாட்டான். அவன் கொடுத்ததை வாங்கிக் கொண்டு வருவேன். பாதிப் பணம் போய் வருவதில் செலவாகிவிடும். அவன் கொடுக்கும் குத்தகை என் பாட்டனார் காலத்தில் ஏற்பட்டது. பக்கத்துக்கு நிலங்களுக்கெல்லாம் குத்தகை இரடித்துவிட்டது. அந்த தடவை நான் கிராமத்திற்குப் போயிருந்த பொது எல்லோரும் என்னை பரிதாபப் பார்வையுடன் பார்த்தார்கள். சிலர் அருகில் நெருங்கி யோசனை கூறினார்கள்.
பாவம்! ஆண்டுக்கு ஒரு முறை வருகிறீர்கள். உங்களுக்கு இந்த ஊர் நிலைமை எப்படித் தெரியும்? கிழவன் ஏதவாது குத்தகை தருகிறானா இல்லையா? ஊரெல்லாம் குத்தகை  ஏறிப்போச்சு. உங்களை மட்டும் அவன் ஏமாற்றுகிறான்என்று சொல்லிக்கொண்டு ஒருவர் முன் வந்து தாம் ஓர் ஆளை இரண்டு பங்கு குத்தகைக்குப் பேசி விடுவதாகச் சொன்னார்.
இல்லை இதனால் என்ன பிரமாதம்? ஏதோ ரொம்ப நாளாய் இருக்கிறான். இருந்து விட்டுப் போகட்டும்என்று நான் வழவழவென்று பேசினதை கேட்டதும் அந்த மனிதருக்கு தைரியம் வந்து விட்டது.
நீங்கள் சும்மா இருங்கள் ஸார்! நீங்கள் தாக்ஷிண்ணியப்படுகிறீர்கள், நான் எல்லாம் ஏற்பாடு செய்து விடுகிறேன். மேலும் பாருங்கள். ஊரோடு ஒத்து வாழ வேண்டும். ஊரில் ஏற்பட்ட குத்தகை வர வேண்டாமோ?” நீங்கள் இப்படிவிட்டால் குடிப்பிரியம் கெட்டுப்போகும்.
இல்லை இல்லை அவனை நீக்க எனக்கு மனம் வரவில்லை. அவன் தான் சாப்பிடட்டுமே. இதையே நான் நம்பி இருக்கவில்லைஎன்றேன்.
என்ன ஸார் நீங்கள் பேசுகிறது? ரொம்ப அழகு! பின் அவனுக்குதான் நிலத்தைச் சாஸனம் எழுதிக் கொடுத்து விட்டுப் போய் விடுங்களேன். இந்த போக்கு வரத்துச் செலவு வேண்டாமேஎன்று என்னைக் கொஞ்சம் பரிகாசம் செய்து ஆரம்பித்தார் அந்த மனிதர்.
நான் எப்போதும் தாக்ஷிண்யப் பிரகிருதி. புது மனிதன் கூட ஒரே கணத்தில் என் தலை மேல் ஏறிவிடுவான். நான் மெல்ல ஞேஞ்ஞ மிஞ்ஞவென்று சொன்னதை அந்த மனிதர் காதிலேயே போட்டுக் கொள்ள வில்லை. வேற ஆளைப் பேசி என் பேருக்கு குத்தகைச் சீட்டு எழுதி வாங்கிக் கொண்டு வந்து என் கையில் கொடுத்து விட்டார் ! இதை எப்படி செங்கானிடம் சொல்வது? அவனை எப்படி அப்புறப்படுத்துவது!” என்பவையே எனக்குப் பெரியபிரச்சனைகளாகி விட்டன.

3

அவன் அதிகமாக பேசி என்னை மடக்கித் தன வசமாக்கிக் கொள்ளாமல் இருக்கும் பொழுது அவனிடம் கண்டிப்பாக விசயத்தைச் சொல்லி விட வேண்டுமென்று, மறு நாள் வயலுக்குப் போன போது,நான் இரண்டு மூன்று தடவை வாயெடுத்தேன். ஒவ்வொரு தடவையும் வாய்வார்த்தை வெளியில் வராமல் நெஞ்சில் சிக்கிக் கொண்டது.
பொளச்சுக்கெடந்தா வர வருசம் கிணத்தைக் கட்டி தொலெ வைக்கணும். சாமி! எனக்கு ஒரு சோடி மாடு வாங்கிக் குடுங்க;இந்த நெலத்துலே பொன் வெளயச் செய்யறேன்!” என்றான் செங்கான்.
செங்கான் உனக்குத்தான் வயசாகிவிட்டதே; இனிமேல் உன்னால் உழுது பயிரிட முடியுமா?” என்று மெள்ள நான் ஆரம்பித்தேன்..
நல்ல சொன்னீங்க. என்னைப்போலே இந்தவூரிலே யாரு காலத்துலே பயிரேத்துறான்? ஏரி மொதத் தண்ணி நமக்கு
ஒனக்கு ஒத்தாசைக்கு ஒருவரும் இல்லையே?”
என் மவன் பொந்திலியன் இருந்தா இந்த ஊரையே சாகுபடி பண்ணிட மாட்டேனா? மூணாம் வருஷம் மகமாயி ஆத்தா-!” என்று சொல்லி செங்கான் பெருமூச்சு விட்டான்.
அவன் மவன் ஒரு பய இருக்கான். அவன் செய்வானே ஒரு பெரிய ஆள் வேல!” என்றான் சற்று நேரம் கழித்து.
செங்கான் மறுபடியும் கொஞ்ச நேரம் சும்மா இருந்தான்.விஷயத்தை அந்த சமயத்தில் அவனிடம் சொல்ல எனக்கு மனமே வரவில்லை. செங்கான் மாமரத்தடியில் உட்கார்ந்து கொண்டு பொந்திலியனை மாரியாத்தா கொண்டு போன வகையைப் பற்றி எண்ணிக் கொண்டிருந்தான் போலும்! திடீரென்று தலை தூக்கி என் முகத்தைப் பார்த்தான்.
ஏஞ்சாமி, நான் பயிரிட முடியாம போட்டுடுவேன்னு ரோசனே பண்றீங்களா? அது இந்த உசிரிலே இல்ல! நெலத்துலே ஈரமில்லே; சக்கையாப் போச்சு மண்ணு, ஏளேட்டுக் கடே கட்டினா நல்லாயிருக்கும் கட்டலாங்களா ?”
பொழுது விழுந்துவிட்டது. தூரத்தில் நரிகள் ஊளையிட்டன.
வாங்க நேரத்திலே வூட்டுக்குப் போவோம் சாமி! ஒங்களுக்கு இருட்டிலே நடந்து பளக்கமிருக்காதுஎன்று முன்னே வழிகாட்டிக் கொண்டு செங்கான் வேகமாக வீட்டை நோக்கிப் புறப்பட்டான். அவனைப் பின்பற்றிச் செல்வது கூட எனக்குச் கொஞ்சம் சிரமமாகப் போய்விட்டது.
ஏஞ்சாமி என்னெ விட்டு நெலத்தெ மாத்தணும்னு ரோசனெயா ? என் உசிரிலே இன்னொருத்தன் அதுல ஏரு பிடிக்கவா? முடியுமா எங்கணாச்சியும்? என் நெலத்துலே எவன் நொளைவான் ..? பாக்கறேன். அந்த மண்ணுத்தான் அவனுக்கு வெளைவாளா?”
கொஞ்ச நேரம் மெளனமாக நடந்தான். நான் ஒரு வரப்பில் கால் தடுமாறி, வயலில் தண்ணீர் கட்டியிருந்த சேற்றில் காலை வைத்துவிட்டேன்.
கெடக்குங்க வாய்க்கால்லே கால களுவிக்கலாம்.. நாப்பது வருசமா என் கையாலே வரப்புப் பிடிச்சி வாய்க்கா பிடிச்சி... பெரிய அய்யா இருந்தா என்னே வுட்டு மாத்தணும்னு நெனைப்பாங்களா ? மண்ணே கண்ணாக் காப்பாத்திஎன்று சொல்லி வந்தவன் திடீரென்றுநான் வுடமாட்டேஞ்சாமி !” என்றான்.
நான் மாற்றுகிறேன் என்று உன்னிடம் சொல்லவில்லையே!” என்றேன்.
அது தானே கேட்டேன்! ஒரு கலம் அரைக்கலம் நீங்க சாப்பிடறது நான் சாப்பிட்டா என்ன  இந்த வயக்காட்டிலே நான் பட்ட பாட்டுக்கு? நெத்தி வேர்வ நெலத்துல விள எம்பாங்க. அது எனக்கல்ல தகும்ராப்பவலா எவன் என்னைப் போல காட்டுலே கெடப்பான்? ரவைக்கு ரவெ தாவத்துக்குத் தண்ணி கொடுக்குறாப் போல எவன் தண்ணி கட்டுவான்? – நேரமறிஞ்சு? நம்ம காட்டு லெச்சுமி என்னோடே பேசுவாளே! ஒரு வருஷம் சூறை உண்டா, சாவி உண்டா, தரிசு உண்டா? மூணாம் வருஷம் மழை இல்லாதப்பக்கூட பயிரேத்திப்பிட்டேனே ! இந்த வயக்காட்டுலே ஒளச்சேதான் நான் சாவனும் சாமி! இதெ வுட்டா நான் செத்துப் போவேன்!”

4

காலை ஐந்து மணிக்குப் பல் துலக்க நிலத்துப் பக்கம் போனேன். செங்கான் கணீரென்ற குரலில் ஏற்றப் பாட்டு பாடிக்கொண்டே தண்ணீர் பாய்ச்சிக்கொண்டிருந்தான்.
மூங்கிலிலை மேலே - தூங்கு பனி நீரே
தூங்கு பனி நீரை  - வாங்கு கதிரோனே!”
என்ற பாட்டின் ஒரு அடி என் காதில் விழுந்தது. வேலை மும்முரத்தில் அவன் என்னைத் திரும்பிக்கூடப் பார்க்கவில்லை.
என்ன ஸார் செங்கான்கிட்ட சொல்லி விட்டீர்களா, இந்தப் பயிரை அறுத்து கொண்டு நிலத்தை விட்டு விட வேண்டுமென்று?” என்று என் நண்பர் கேட்டார்.
இல்லை சொல்லப் போவதில்லை. செங்கான் கொடுக்கும் நெல் போதும் எனக்கு!” என்றேன், தலை நிமிர்ந்து.
*****
மணிக்கொடி 23.09.1934
From : http://azhiyasudargal.blogspot.com அழியாச்சுடர்கள்

குறிப்பு: நல்ல இலக்கியம் எல்லோரையும் சென்றடைய வேண்டும் என்ற நோக்கத்திலேயே இங்கு பதியப்படுகிறது. வேறு வணிக நோக்கம் எதுவுமில்லை. இதில் யாருக்கேனும் ஆட்சேபனை இருந்தால் தெரியப்படுத்தவும். அவற்றை நீக்கிவிடுகிறேன். படைப்புகளின் காப்புரிமை எழுத்தாளருக்கே